இளம் சாதனையாளர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


இளம் சாதனையாளர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 31 July 2023 12:15 AM IST (Updated: 31 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

இளம் சாதனையாளர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்

கொரடாச்சேரி:

இளம் சாதனையாளர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.

கல்வி உதவித்தொகை

இளம் சாதனையாளர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தினை சார்ந்த 3 ஆயிரத்து 93 மாணவ, மாணவிகளுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்குள் இருத்தல் வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9-ம் வகுப்பு அல்லது 11-ம் வகுப்பு படித்து கொண்டிருக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வு

9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்படுபவர்கள், தேசிய தேர்வு முகமை நடத்தும் மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான நுழைவுத்தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இத்தேர்விற்கு வருகிற (ஆகஸ்டு) 10-ந்தேதிக்குள், https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை விண்ணப்பித்ததில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும். எழுத்துத்தேர்வு செப்டம்பர் மாதம் 29-ந்தேதி நடைபெறும்.

ஆவணங்களை இணைத்து...

விண்ணப்பத்துடன் செல்போன் எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு எண், வருமானச்சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் https://yet.nta.ac.in மற்றும் https://socialjustice.gov.in/schemes/ ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story