அறச்சலூர் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை; குழந்தை இல்லாத ஏக்கத்தில் விபரீத முடிவு
அறச்சலூர் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அறச்சலூர்
அறச்சலூர் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குழந்தை இல்லாத ஏக்கம்
கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்தவர் முத்து (வயது 26). கூலித்தொழிலாளி. இவருக்கும், ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள புதுகாலனி தம்பரம் வலசு பகுதியை சேர்ந்த நிவேதாவுக்கும் (22) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் 2 பேரும் புது காலனி தம்பரம்வலசு பகுதியில் தங்கியிருந்தனர். முத்து கூலி வேலைக்கு சென்று வருகிறார்.
திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் நிவேதா ஏக்கத்திலும், மனவேதனையிலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் கடந்த ஒரு வாரமாக வயிற்று வலியால் அவதிப்பட்டதாகவும் தெரிகிறது.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷத்தை குடித்துவிட்டு வீட்டில் வாந்தி எடுத்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் மாவட்டம் முத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கும், அதன்பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நிவேதா நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நிவேதாவுக்கு திருமணம் நடந்து 2 ஆண்டுகளே ஆவதால் ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஷ்குமாரும் விசாரணை நடத்தி வருகிறார்.