குலசேகரன்பட்டினம் அருகே பெற்றோருடன் இளம்பெண் விஷம் குடிப்பு: கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
குலசேகரன்பட்டினம் அருகே பெற்றோருடன் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் அருகே மகளுடன் பெற்றோர் விஷம் குடித்த வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் நிறுவன கணக்காளர்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே சிறுநாடார்குடியிருப்பைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது 55). இவருடைய மனைவி சத்தியவாணி (50). இவர்களுடைய மகள் சந்தியா (27).
இவருக்கும், சாத்தான்குளம் அருகே முதலூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சத்தியசேகர் மகன் ஹரிகரசுதனுக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஹரிகரசுதன், உடன்குடி அனல்மின் நிலைய கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகிறார்.
குடும்ப தகராறு
திருமணத்துக்கு பின்னர் ஹரிகரசுதன், மனைவியின் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். ஹரிகரசுதன்- சந்தியா தம்பதியின் பெற்றோர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஹரிகரசுதன்- சந்தியா தம்பதிக்கு குழந்தை இல்லாததால், அவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.
இதுதொடர்பாக சந்தியாவை ஹரிகரசுதனின் குடும்பத்தினரும் நேரிலும், செல்போனிலும் தொடர்பு கொண்டு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த சந்தியாவின் தாயார் சத்தியவாணி தனது மகளை குழந்தைப்பேறுக்கு சிகிச்சை பெறுவதற்காக ஆறுமுகநேரி தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று வந்தார்.
3 பேர் விஷம் குடிப்பு
பின்னர் வீட்டுக்கு வந்த சந்தியாவிடம் கணவர் ஹரிகரசுதன் மீண்டும் தகராறு செய்து, அவரை சுவற்றில் தள்ளி விட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு ஹரிகரசுதன் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். இதுகுறித்து சந்தியா தனது தந்தை ரகுபதியிடம் செல்போனில் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரகுபதியும் சொந்த ஊருக்கு வந்தார்.
தங்களது மகள் சந்தியாவுக்கு குழந்தை இல்லாததால் கணவரின் குடும்பத்தினரால் கொடுமைப்படுத்தப்பட்டதை அறிந்த ரகுபதி குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி கடந்த 30-ந்தேதி இரவில் ரகுபதி, அவருடைய மனைவி சத்தியவாணி, மகள் சந்தியா ஆகிய 3 பேரும் விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினர்.
5 பேர் மீது வழக்கு
இதுகுறித்து சந்தியா தனது உறவினருக்கு செல்போனில் தெரிவித்ததால், அவர்கள் விரைந்து சென்று, 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சந்தியா உள்ளிட்ட 3 பேரை தற்கொலைக்கு தூண்டியதாக ஹரிஹரசுதன், அவருடைய அண்ணன் சத்தியசீலன் என்ற சதீஷ், தம்பி ஜீவஜனாத் என்ற ஜனா, தந்தை சத்தியசேகர், சத்தியசீலனின் மனைவி ராஜலட்சுமி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.