கருவேப்பிலங்குறிச்சி அருகே இளம்பெண் தூக்கில் பிணம் சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார்
கருவேப்பிலங்குறிச்சி அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள க.தொழுர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் தங்கபாண்டியன் (வயது 35), இவரது மனைவி ஐஸ்வர்யா (23). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு பூவேந்தன்(4) என்ற மகனும், பார்கவி(2) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் ஐஸ்வர்யா வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஐஸ்வர்யாவின் தாய் வளர்மதி கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது மகள் ஐஸ்வர்யா சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.