நத்தத்தில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்


நத்தத்தில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்
x

நத்தத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

நத்தம் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி சிந்து (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்குப்போட்டு சிந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த நத்தம் போலீசார் விரைந்து சென்று சிந்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சிந்து இறந்தது குறித்து அறிந்த அவருடைய உறவினர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி நத்தம் அரசு மருத்துவமனை முன்பு திண்டுக்கல் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த தாசில்தார் சுகந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி மற்றும் போலீசார்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பெண் தற்கொலை சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனால் உறவினர்கள் மறியலை கைவிட்டனர். இந்த மறியல் காரணமாக திண்டுக்கல் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story