புதுக்கோட்டையில் புதுமண தம்பதி தற்கொலை


புதுக்கோட்டையில் புதுமண தம்பதி தற்கொலை
x
தினத்தந்தி 1 April 2023 12:51 AM IST (Updated: 2 April 2023 12:28 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

புதுக்கோட்டை

தம்பதி தற்கொலை

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கம்மாளர் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 30). இவருக்கு உறவினரின் மகளான கவுசல்யா (23) என்பவருடன் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். ஆனந்த் தச்சு தொழில் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி வீட்டில் கவுசல்யா தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தார். தரையில் ஆனந்த் விஷம் குடித்த நிலையில் படுத்து கிடந்தார். அவரது வீட்டிற்கு நண்பர் ஒருவர் வந்து பார்த்த போது அவர்கள் 2 பேரும் பிணமாக கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் தம்பதி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை நடந்தது.

ஆர்.டி.ஓ. விசாரணை

மேலும் தம்பதி தற்கொலைக்கான காரணம் குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் திருமணமான 1½ ஆண்டில் புதுமண தம்பதி தற்கொலை செய்த நிலையில், புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்தும் விசாரித்து வருகிறார்.


Next Story