போட்டிபோட்டு வழுக்கு மரம் ஏறிய இளைஞர்கள்


போட்டிபோட்டு வழுக்கு மரம் ஏறிய இளைஞர்கள்
x
தினத்தந்தி 10 Sept 2023 5:45 AM IST (Updated: 10 Sept 2023 5:45 AM IST)
t-max-icont-min-icon

கம்பம், தேவதானப்பட்டியில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில், இளைஞர்கள் போட்டிபோட்டு கொண்டு வழுக்கு மரம் ஏறினர்.

தேனி

கிருஷ்ண ஜெயந்தி

கம்பத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா 3 நாட்கள் நடைபெற்றது. விழாவின் இறுதிநாளான நேற்று முன்தினம் காலை ஸ்ரீ கம்பராய பெருமாள் உற்சவர், ஸ்ரீ வேணுகோபாலனுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் 10, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இதேபோல் விளையாட்டு போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் நடன போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாலையில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கருடாழ்வார் வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகளான போக்குவரத்து சிக்னல், காந்தி சிலை, தியாகி வெங்கடாச்சலம் தெரு, பார்க் ரோடு, வேலப்பர் கோவில் வழியாக உலா வந்தார். பின்னர் வேலப்பர் கோவில் முன்பு வழுக்கு மரம் ஏறும் போட்டி மற்றும் உறியடி நிகழ்ச்சி விடிய, விடிய நடைபெற்றது. இதில் இளைஞர்கள் போட்டி போட்டு வழுக்கு மரம் ஏறியதுடன், உறியடித்தனர். பின்னர் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு விழா கமிட்டியினர் பரிசுகளை வழங்கினர்.

வழுக்குமரம் ஏறிய இளைஞர்கள்

இதேபோல், தேவதானப்பட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழா 3 நாட்கள் நடந்தது. விழாவின் முதல் நாளில் மகப்பேறு சேவையும், காந்தி மைதானத்தில் உள்ள உற்சவ மண்டபத்திற்கு சாமி அழைத்து வருதல் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பின்னர் 2-ம் நாளில் சாமி ஊர்வலம் நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். விழாவின் 3-ம் நாளான நேற்று முன்தினம் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். மேலும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story