ஆர்வத்தால் ஆபத்தைத் தேடும் இளைஞர்கள்


செல்பி மோக ஆர்வத்தால் ஆபத்தை இளைஞர்கள் தேடுகின்றனர்.

விருதுநகர்

ஒரு நேரத்தில் புகைப்படங்கள் எடுக்கும் 'கேமிரா'க்கள் அரிதாக பார்க்கப்பட்டன. புகைப்படக்கலைஞர்கள் பெரிதாக பார்க்கப்பட்டனர்.

இன்று தொழில்நுட்ப புரட்சியால் செல்போன்கள் வைத்து இருப்பவர்கள் அனைவருமே புகைப்படக்காரர்கள்தான். ஐந்து வயது குழந்தைகூட ஒரு காட்சியை செல்போனில் படம் எடுத்துவிட முடிகிறது. செல்போன்கள் மூலம் படம் எடுக்கிற மோகம் பெரியவர் முதல், சிறியவர் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை.

'செல்பி' மோகம்

அதிலும் செல்போனில் 2 பக்கமும் படம்பிடிக்கிற கேமிரா வசதி, என்று வந்ததோ அன்று முதல் சுயமாக நம்மைப் படம் எடுத்துக் கொள்கிற 'செல்பி' என்கிற மோகம் ஒவ்வொருவரையும் தொற்றிக் கொண்டுவிட்டது.

திருமண விழாக்களில் மணமக்களுடன் இணைந்து 'செல்பி', பொது இடங்களில் பிரபலங்களை கண்டுவிட்டால் ஆர்வத்தில் அவர்களுடன் 'செல்பி', சுற்றுலாத் தலங்களுக்கு சென்றால் இயற்கை எழில்மிகு காட்சிகளுடன் 'செல்பி', ஏன்? உயிரிழந்த சடலங்கள் முன்பு இருந்துகூட 'செல்பி' எடுக்கிற அளவில் 'செல்பி' இன்று அதுவும் இளைய தலைமுறையினரை ஆட்டிவித்து வருகிறது. புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அதிகம் 'லைக்ஸ்' பெற வேண்டும் என்ற ஆசையில், ஆர்வத்தில் ஆபத்தான இடங்களில் 'செல்பி' எடுப்பதை இளைஞர்கள் விரும்புகிறார்கள்.

உயிருக்கு உலை

இவ்வாறாய் ஓடும் ரெயில் முன்பு, பாறையின் மேல் நின்று, புயல் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்ற காலங்களில் ஆபத்தான இடங்களில் நின்று செல்பி எடுக்க முயன்று பல உயிர்கள் பறிபோய் இருக்கின்றன.

இருந்தும் மக்களிடையே 'செல்பி' மோகம் குறைந்தப்பாடில்லை. சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 150 அடி உயரப் பாறையின் மேல் நின்று மணப்பெண் ஒருவர் 'செல்பி' எடுக்க முயன்றபோது கால் தவறி கல்குவாரி தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடினார். அவரை சினிமா கதாநாயகன் போல் மணமகன் தனது உயிரைத் துச்சமென நினைத்து கீழே குதித்து காப்பாற்றினார்.

இந்தச் சம்பவம் ஆபத்தான இடங்களில் 'செல்பி' எடுப்பதால் ஏற்படும் விபரீதத்தை எடுத்துக் காட்டும் எச்சரிக்கையாக அமைந்தது.

உயிருக்கு உலை வைக்கும் இதுபோன்ற ஆபத்தை விளைவிக்கும் 'செல்பி' மோகம், இளைஞர்களிடம் குறையுமா ? என்பது பற்றிய பல்வேறு தரப்பினரின் கருத்துகள் வருமாறு:-

போதைப்பழக்கம்

திரைப்பட நடிகை கஸ்தூரி:-எல்லோரது வாழ்க்கையிலும் செல்போன் இப்போது நீக்கவே முடியாத அங்கமாகிவிட்டது. ஒரு காலத்தில் செல்போன் நம்மிடம் இல்லை. இப்போது செல்போன் இல்லாமல் நாமே இல்லை. செல்போன் இல்லாத காலம் என்பது இனி நினைவில் இருக்கவும் போவதில்லை.

செல்போன் நல்லதா, கெட்டதா? 'செல்பி' என்பது நல்லதா, கெட்டதா? என்பதை யோசிக்கும் காலத்தை நாம் எப்போதோ தாண்டிவிட்டோம். அது பற்றிய யோசனைகளை கடந்து, தற்போது செல்போனுடன் வாழப்பழகிவிட்டோம். செல்போன் பயன்பாடு என்பதும், 'செல்பி' எடுப்பது என்பதும் அவரவர் நாகரிகத்தை பொறுத்த விஷயமாகும்.

'செல்பி' என்ற விஷயம், இப்போது மூச்சுக்காற்று போல பரவலாகி விட்டது. வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. 'செல்பி' எடுப்பதை தவறு என்று சொல்லவே மாட்டேன். ஆனால் அதன் போக்கு மாறிவிடக்கூடாது. அதை மட்டும் உறுதியாகச் சொல்வேன்.

தண்டவாளத்தில் நின்று 'செல்பி'

ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறை அதிகாரி சுந்தர குருசாமி கூறியதாவது:- தற்போது பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவ-மாணவிகளிடையே செல்போன் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதில் 'செல்பி' என்ற மோகத்தின் ஆர்வத்தாலும், மலைப்பகுதி, ெரயில் வரும்போது தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்பது, அருவிகளில் குளிக்கும் போது, குளங்களில் டைவடிக்கும் போது, சதுரகிரி கோவிலுக்கு செல்லும் நீரோடைகளில் என ஆபத்தான இடங்களில் உயிரையும் பொருட்படுத்தாமல் 'செல்பி' எடுக்கின்றனர்.

உயிரிழந்தவர்களை மீட்க தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் மீட்பு துறையினர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆபத்தான இடங்களில் 'செல்பி' எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆபத்தான முறையில் 'செல்பி' எடுப்பதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தீயணைப்பு துறை சார்பில் பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

கீழே விழும் நிலை

விருதுநகர் தீயணைப்பு நிலைய அதிகாரி கண்ணன்:- சுற்றுலா தலங்களுக்கு செல்வோர் மலைப்பிரதேசம், நீர்நிலை ஆகியவற்றிற்கு நண்பர்கள், குடும்பத்துடன் செல்லும் போது 'செல்பி' எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு 'செல்பி' எடுக்கும் பொழுது தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காக சுற்றுப்புறத்தில் என்ன இருக்கிறது என்பதை கவனிக்காமல் பின்னால் செல்வதால் தவறி கீழே விழும் நிலை ஏற்பட்டு சில சந்தர்ப்பங்களில் உயிரிழக்கும் ஆபத்தான நிலையும் ஏற்படுகிறது. இதேபோன்று எண்ணற்ற இடங்களில் 'செல்பி' எடுக்கும் போது கவனக்குறைவால் கீழே விழும் அபாயம் உள்ளது.

சதுரகிரி மலை, பிளவக்கல் அணை, அய்யனார் அருவி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் போது 'செல்பி' எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த இடங்களில் எடுக்கும் போது கவனமில்லாமல் இருந்தால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இம்மாதிரியான சுற்றுலா தலங்களில் 'செல்பி' எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

தகவல் பலகை

ராஜபாளையம் ஐஸ்வர்யா:- 'செல்பி' எடுக்கும் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதில் சிறிய சந்தோஷத்திற்காக இன்றைய இளைஞர்கள் தங்கள் உயிரையே பனயம் வைத்து 'செல்பி' எடுக்கிறார்கள். என்னதான் கட்டுப்பாடுகள் விதித்தாலும் 'செல்பி' மோகம் குறையவில்லை. மலைப்பகுதி, பொழுதுபோக்கு இடங்களில் 'செல்பி' எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆபத்தான இடங்களில் 'செல்பி' எடுப்பதை தடை செய்ய வேண்டும் அல்லது விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய தகவல் பலகை அமைக்க வேண்டும்.

நிவாரணம் கிடையாது

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வக்கீலும், முன்னாள் அரசு சிறப்பு வக்கீலுமான கிருஷ்ணதாஸ் கூறியதாவது:-இளம் தலைமுறை செல்பி மோகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளனர். தனித்தனியாகவும், குரூப் ஆகவும் செல்பி எடுத்து தங்களை தாங்களே பார்த்து மகிழ்ந்து கொள்கின்றனர். சமூக வலைதளங்களான பேஸ் புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் போன்றவற்றில் தங்களது செல்பி படங்களை பகிர்ந்தும் மகிழ்கின்றனர். இதனால் தனிப்பட்ட முறையில் அவர்கள் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்கின்றனர். சுற்றுலா தலங்களில் ஆபத்தான முறையில் செல்பி எடுத்து தவறி விழுந்தால் அவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. அதேபோல செல்பி எடுக்கும் போது பாதிப்பு அடைந்தாலும், உயிர் இழந்தாலும் எந்த நிவாரணத்தையும் பெற முடியாது. செல்பி மாயைக்குள் சிக்கிக் கிடக்கும் இளம் தலைமுறையினர் தங்களைத்தாங்களே சுய பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வது மட்டுமே இதுபோன்ற சம்பவங்களுக்கு தீர்வாக அமையும்.

மதுரை கோட்ட ரெயில்வே பாதுகாப்புபடை கமிஷனர் வி.ஜே.பி.அன்பரசு:-

ரெயில்கள், ரெயில் நிலையங்களில், தண்டவாள பகுதிகளில் இருந்து செல்பி எடுக்கும் முன், ஒரு வினாடி யோசித்து செயல்பட வேண்டும். நமது விலைமதிப்பில்லாத உயிர் தான் முக்கியம் என்பதை உணர வேண்டும். அப்போது தான் விபரீதங்கள், உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க முடியும். தற்போது மின்சார ரெயில் பாதையில், உயர்அழுத்த மின் கம்பிகள் செல்கின்றன. ரெயிலின் வேகமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால், ரெயில் பெட்டியின் படிக்கட்டில் நின்று கொண்டு, ரெயில் மீது ஏறிக்கொண்டு, தண்டவாளத்தில் நின்று கொண்டு செல்பி எடுப்பது மிகவும் ஆபத்தானது. தென்னக ரெயில்வேயில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரின் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரெயில் தண்டவாள பகுதியின் அருகில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு இதுகுறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதனால், மதுரை கோட்டத்திற்கு உள்பட்ட மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ரெயில் பாதைகள், ரெயில்களில் இதுபோன்ற செல்பி எடுப்பவர்கள் மிகவும் குறைவு. ரெயில்வே சட்டப்படி, செல்பி எடுப்பவர்கள் மீது, படிக்கட்டில் பயணம் செய்வது, தண்டவாளத்தில் அத்துமீறி நுழைவது ஆகிய பிரிவுகளின் கீழும், பொதுமக்களுக்கு இடையூறு என்ற பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.



Next Story