தீக்குளித்து இளம் பெண் தற்கொலை
விழுப்புரம் அருகே தீக்குளித்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள சிறுவந்தாடு உப்புமுத்தாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மனைவி சந்தியா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். திருமூர்த்தி கட்டிட வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கம் உடைய அவர் சரியாக வேலைக்கு செல்லாமலும், குடும்ப செலவுக்கு பணம் தராமலும் இருந்தார். இதனால் அவரது மனைவி சந்தியா மனமுடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று தனது வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.