வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 9 July 2023 12:45 AM IST (Updated: 9 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அடுத்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அடுத்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உதவித்தொகை

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 30.6.2023 அன்று 5 ஆண்டுகள் முடிவடைந்த, முறையாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் உதவித்தொகை பெற்று பயன்பெறலாம். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை, எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் பட்டப்படிப்பு வரை தேர்ச்சி பெற்று பதிவு செய்து 30.6.2023 அன்றைய தேதியில் ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவர் ஆவர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானம் மற்றும் வயதில் உச்சவரம்பு ஏதுமில்லை. பதிவுதாரர் எந்த ஒருகல்வி நிறுவனத்திலும் பயில்பவராக இருக்கக்கூடாது.

உதவித்தொகை எவ்வளவு?

இந்த தகுதிகளை உள்ளடக்கிய பதிவுதாரர்களுக்கு, தமிழக அரசால் கீழ்கண்டவாறு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பொதுப்பிரிவினருக்கு, மாதம் ஒன்றிற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியின்மை எனில் ரூ.200-ம், பத்தாம் வகுப்புதேர்ச்சி எனில் ரூ.300-ம், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி எனில் ரூ.400-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி எனில் ரூ.600-ம் 3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு 3 ஆண்டுகளுக்கு தொடர்புடையவரின் வங்கிகணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த திட்டத்தில் பயன் பெற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினபிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதரபிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்கவேண்டும்.

குடும்ப வருமானம்

அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு, எழுதப் படிக்க தெரிந்த மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி எனில் ரூ.600-ம், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி எனில் ரூ.750-ம், பட்டப்படிப்புதேர்ச்சி எனில் ரூ.1000-ம், ஒவ்வொரு மாதமும் தொடர்புடையவரின் வங்கிகணக்கில் 10 ஆண்டுகளுக்கு செலுத்தப்படும்.

ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் தொழில்சார்ந்த பட்டப் படிப்புகள் முடித்தவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்க இயலாது.

கடைசி நாள்

தகுதி உடைய பதிவு தாரர்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி, கல்லூரி மாற்றுச்சான்றிதழ் மற்றும் அசல் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் மன்னார்குடி சாலை, விளமல், திருவாரூர் என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து விண்ணப்ப படிவத்தை பெற்று கொள்ளலாம். அல்லது அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தின் இணையதள பக்கத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story