மதுபாட்டில்களை எல்லை கோடாக்கி கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள்
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மதுபாட்டில்களை எல்லை கோடாக்கி இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுகின்றனர்.
தமிழகத்தில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளிகள் வருகிற 7-ந்தேதி திறக்கப்பட உள்ளது. இந்த கோடை விடுமுறையை மாணவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று கழித்து வருகின்றனர். வசதி படைத்த குடும்பத்தில் உள்ளவர்கள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கும், வெளிநாடுகளுக்கும், ஏழை, எளிய மாணவர்கள் உள்ளூரில் உள்ள பூங்கா, கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கும் சென்று விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி கடலூரிலும் சில்வர் பீச், பூங்கா போன்ற இடங்களுக்கு சென்று மாணவர்கள் பொழுதை கழித்து வருகின்றனர். சிலர் தங்களுக்கு விருப்பமான விளையாட்டுகளை விளையாடி மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.
மது பாட்டில்கள்
இதில் சில இளைஞர்கள், மாணவர்கள் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இதற்கிடையில் இந்த மைதானத்தில் மது பிரியர்கள் குடித்துவிட்டு காலி மது பாட்டில்களை அப்படியே போட்டு சென்றுள்ளனர்.
இந்த மது பாட்டில்கள் அகற்றப்படாமல் அங்கேயே கிடந்தன. இதைப் பார்த்த கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள், மாணவர்கள் அந்த மது பாட்டில்களை சுற்றிலும் அடுக்கி எல்லை கோடாக வைத்து கடந்த சில நாட்களாக கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியுடன் பார்வையிட்டு செல்கின்றனர். மேலும் மைதானம் நகரின் மையப் பகுதியில் உள்ளதால் இதை கடந்து தான் அரசு ஊழியர்கள் முதல் அன்றாடம் கூலி வேலைக்கு செல்வோர் என அனைவரும் சென்று வருகின்றார்கள். ஆனாலும் அதை தடுப்பதற்கு யாரும் முன் வரவில்லை.
இருப்பினும் இதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஆகவே மஞ்சக்குப்பம் மைதானத்தில் உள்ள காலி மது பாட்டில்களை அகற்ற வேண்டும் என்றும், மைதானத்தை பாராக மாற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.