திறன் வளர்ப்பு பயிற்சி திட்டத்தை இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்- ஏ.கே.எஸ்.விஜயன்


திறன் வளர்ப்பு பயிற்சி திட்டத்தை இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்- ஏ.கே.எஸ்.விஜயன்
x

திறன் வளர்ப்பு பயிற்சி திட்டத்தை இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் கூறினார்.

திருவாரூர்

திறன் வளர்ப்பு பயிற்சி திட்டத்தை இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் கூறினார்.

இளைஞர் திறன் திருவிழா

திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி அளிக்கும் வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் இளைஞர் திறன் திருவிழா நடந்தது.

நாகை செல்வராஜ் எம்.பி., மாரிமுத்து எம்.எல்.ஏ., மகளிர் உதவி திட்ட அலுவலர் தில்லை மணிகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் வரவேற்றார். விழாவுக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திறன் வளர்ப்பு பயிற்சி

கிராமப்புற ஏழை, எளிய, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார்.

18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட 5-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்துள்ள ஆண்கள், பெண்களுக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 3 மாதம் முதல் 6 மாதங்கள் வரை பயிற்சி அளித்து முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கப்பட உள்ளது.

ஆலோசனை

மேலும் திறன் வளர்ப்பு பயிற்சி பெற்று வெளிநாடு சென்று வேலை செய்ய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயரினை இங்கே பதிவு செய்து உரிய ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். முதல்-அமைச்சரின் கனவு திட்டமான இந்த திறன் வளர்ப்பு பயிற்சி திட்டத்தை கிராமப்புற இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் இளைஞர் திறன் வளர்ப்பு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் விமலா ரவிச்சந்திரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாலஞானவேல், ஒன்றிய துணை செயலாளர் வேல்முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நேதாஜி (நெம்மேலி), முத்துச்செல்வி (அக்கரைகோட்டகம்), அமுதா முருகையன் (ஆதிச்சபுரம்) ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன் சாந்தகுமார் நன்றி கூறினார்.


Next Story