திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை அழைத்த வாலிபர், கைது

செல்போனில் ஆன்லைன் விளையாட்டு மூலம் மலர்ந்த காதலில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை நாகர்கோவில் அழைத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கபிஸ்தலம்;
செல்போனில் ஆன்லைன் விளையாட்டு மூலம் மலர்ந்த காதலில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை நாகர்கோவில் அழைத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆன்லைன் விளையாட்டு மூலம் மலர்ந்த காதல்
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு ஆன்லைன் விளையாட்டு மூலம் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் மகன் கவின்(வயது 21) அறிமுகம் ஆகியுள்ளார்.இந்த அறிமுகம் மூலம் சிறுமியின் செல்போன் எண்ணை கவின் கேட்டு வாங்கியுள்ளார். அதன்பிறகு கவின் அடிக்கடி செல்போன் மூலம் சிறுமியுடன் பேசி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து நாளடைவில் காதல் மலர்ந்தது.
திருமணம் செய்வதாகஆசை வார்த்தை கூறி...
இந்த நிலையில் கவின் அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். அவர் கூறியதை உண்மை என்று நம்பிய அந்த சிறுமியிடம், ஆரல்வாய்மொழிக்கு தன்னை பார்க்க வருமாறு கவின் அழைத்துள்ளார்.இதனை தொடர்ந்து அந்த சிறுமி சம்பவத்தன்று தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி கவினை தேடி ஆரல்வாய்மொழி சென்றுள்ளார்.
போலீசில் புகார்
வீட்டில் இருந்த தனது மகளை காணாததால் அந்த சிறுமியின் தந்தை சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.போலீசாரின் விசாரணையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கவின் நாகர்கோவில் அழைத்து சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போலீசார் இருவரையும் கும்பகோணம் வரவழைத்தனர்.
போக்சோ சட்டத்தில் கைது
கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட கவின் மற்றும் சிறுமியிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை கவின் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கவினை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.இதனையடுத்து கவினை அடுத்த மாதம்(ஜூன்) 5-ந் தேதி வரை புதுக்கோட்டை சிறையில் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து போலீசார் கவினை புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.