சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர் கைது
தேர் பவனியின் போது காரை நிறுத்துமாறு கூறியதால், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி,
தேர் பவனியின் போது காரை நிறுத்துமாறு கூறியதால், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தேர் பவனி
நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் பகுதியில் உள்ள மாதா ஆலயத்தில் தேர்த்திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் தேர் பவனி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேர் பவனியையொட்டி ரோகிணி சந்திப்பு பகுதியில் இருந்து காந்தல் செல்லும் வழியாக வந்த வாகனங்களை போலீசார் நிறுத்தினர்.
ஊட்டி காந்தல் பகுதியை சேர்ந்தவர் ஜான் எட்வின் (வயது 25). இவர் ஊட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். தேர் பவனியின் போது அவர் அந்த வழியாக வந்தார். அங்கு அவர் காரை நிறுத்தாமல் போலீசாரிடம் தகராறு செய்து உள்ளார். இதனால் போலீசாருக்கும், ஜான் எட்வினுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
வாலிபர் கைது
பின்னர் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஜான் எட்வின் சப்-இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தரை திடீரென தாக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற போலீசார் உடனடியாக அவரை மடக்கி பிடித்தனர். அப்போது ஜான் எட்வின் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ஜான் எட்வினை கைது செய்தனர். அதன் பின்னர் அவர் குன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஊட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.