நடராஜர் கோவில் கதவு பூட்டை உடைத்த வாலிபர் கைது


நடராஜர் கோவில் கதவு பூட்டை உடைத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Nov 2022 12:15 AM IST (Updated: 25 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கதவு பூட்டை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தெற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே செல்லும் வழியில் 2-ம் பிரகாரத்தில் பெரிய கதவு ஒன்று உள்ளது. இந்த கதவு பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் வாலிபர் ஒருவர் இரும்பு கம்பியால், கோவில் கதவில் இருந்த 2 பூட்டுகளை உடைத்தார். இந்த சத்தம் கேட்டு பக்தர்கள் மற்றும் தீட்சிதர்கள் அங்கு விரைந்து வந்து, அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். உடனே அந்த வாலிபர் தான் வைத்திருந்த இரும்பு கம்பியால் அவர்களை தாக்க முயன்றார்.

இதற்கிடையே தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் விரைந்து வந்து, அந்த வாலிபரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

காரணம் என்ன?

விசாரணையில், அவர் சிதம்பரம் அருகே உள்ள மணலூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் ஆனந்த் (வயது 32) என்பது தெரியவந்தது. இவர் கோவில் கதவு பூட்டை உடைத்தது குறித்து போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் சிறுவயதில் இருந்தே நடராஜர் கோவிலுக்கு வந்து செல்வேன். அப்போது நடராஜர் கோவிலில் தெற்கு கோபுர வாசல் வழியாக செல்லும் 2-ம் பிரகாரத்தில் உள்ள பெரிய கதவு மட்டும் பூட்டியே இருந்தது. எனவே அந்த கதவு பூட்டை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் அப்போதே எனக்குள் இருந்து வந்தது. அதனால் தான் தற்போது கதவு பூட்டை உடைத்தேன். இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர்.


Next Story