தொழிலாளியின் காதை அறுத்த வாலிபர் கைது
முன்விரோத தகராறில் தொழிலாளியின் காதை அறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
முன்விரோத தகராறு
பேரணாம்பட்டு அருகே உள்ள எம்.வி.குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 30). ஆட்டோ ஓட்டுவதுடன், மேளம் அடிக்கும் தொழிலும் செய்து வருகிறார். இவருடைய உறவினர் மகளை கீழ்செண்டத்தூர் கிராமத்தை சேர்ந்த சூர்யா (23) என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த சேட்டு, சூர்யாவை போனில் கண்டித்துள்ளார். இதனால் இவர்களுக்கிடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள மேல்பட்டி கிராமத்தில் நடந்த கெங்கையம்மன் திருவிழாவுக்கு சேட்டு, சூர்யா ஆகிய இருவரும் வந்திருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சூர்யா தான் வைத்திருந்த பிளேடால் சேட்டுவின் இடதுபுற காதை அறுத்ததாக கூறப்படுகிறது.
கைது
இதில் படுகாயம் அடைந்த அவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மேல்பட்டி போலீஸ் நிலையத்தில் சேட்டுவின் தந்தை பிச்சாண்டி கொடுத்த புகாரின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தினகரன் வழக்குப்பதிவு செய்து சூர்யாவை கைது செய்தார்.