டிப்பர் லாரியை சேதப்படுத்திய வாலிபர் கைது
நிலக்கோட்டை அருகே, டிப்பர் லாரியை சேதப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நிலக்கோட்டை அருகே உள்ள முசுவனூத்து ஊராட்சிக்கு உட்பட்ட மிளகாய்பட்டி கிராமத்தில் தனியார் கல்குவாரி ஒன்று உள்ளது. இந்த கல்குவாரி கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகிறது. குவாரியில் பாறைகளை வெடி வைத்து தகர்க்கும்போது அருகே உள்ள தோட்டங்களுக்கு கற்கள் பெயர்ந்து விழுவதாக அப்பகுதி விவசாயிகள் புகார் கூறி வந்தனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கல்குவாரியில் பாறைகளை வெடி வைத்து உடைத்ததில் கற்கள் அங்கு உள்ள பிரசாந்த் (வயது 25) என்பவரின் தோட்டத்தில் விழுந்தது. நேற்று காலையில் ேதாட்டத்துக்கு வந்த அவர், கற்கள் விழுந்து கிடப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்தார். அப்போது குவாரியில் இருந்து கற்களை ஏற்றி கொண்டு டிப்பர் லாரி ஒன்று வந்தது. அந்த லாரியின் மீது பிரசாந்த் கற்களை வீசினார். இதில் லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. இதுகுறித்து நிலக்கோட்டை போலீசில் லாரி டிரைவர் சிவக்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை கைது செய்தனர்.