தூத்துக்குடியை சேர்ந்தவரிடம் ஆன்லைன் மூலம் ரூ.46 லட்சம் மோசடி வாலிபர் கைது


தூத்துக்குடியை சேர்ந்தவரிடம் ஆன்லைன் மூலம் ரூ.46 லட்சம் மோசடி வாலிபர் கைது
x

எலியாஸ் பிரேம்குமார்

தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியை சேர்ந்தவரிடம் ஆன்லைன் மூலம் ரூ.46 லட்சம் மோசடி செய்ததாக நெல்லை வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மில்லர்புரம் சின்னமணிநகரை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 52). இவரது டெலிகிராம் ஆப்பில், பகுதிநேர வேலை தேவையா? என்ற விளம்பரம் வந்து உள்ளது. அதனை பார்த்த தங்கதுரை, அந்த மெசேஜ் அனுப்பிய நபரின் எண்ணை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

அப்போது அந்த நபர், தங்கள் கம்பெனி உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது. கொரோனா காலத்தில் தங்களது கம்பெனி வருமானம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனை மேம்படுத்துவதற்காக, அதிகம் பேர் கம்பெனியின் இணையதளத்தை பார்த்து ஸ்டார் ரேட்டிங் கொடுத்தால் கம்பெனியின் வருமானத்தை அதிகரிக்க முடியும். இதுபோன்று ஸ்டார் ரேட்டிங் கொடுப்பதற்கு கமிஷன் தரப்படும் என்று கூறி உள்ளார்.

இதனால் தங்கதுரை ஸ்டார் ரேட்டிங் செய்து உள்ளார். முதலில் அவருக்கு ரூ.1,100, ரூ.1,500 லாபம் கமிஷனாக கொடுத்து நம்ப வைத்து உள்ளனர். பின்னர் அதிக கமிஷன் வேண்டும் என்றால் பணம் முதலீடு செய்து, கம்பெனி கூறும் பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்று தங்கதுரையிடம் கூறி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் கூறிய வலைதளத்தில் தங்கதுரை பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.45 லட்சத்து 91 ஆயிரத்து 54 பணம் செலுத்தி உள்ளார். இதற்காக கம்பெனியினர் பல பணிகளை வழங்கி உள்ளனர். ஆனால் அவர்கள் கூறியது போன்று கமிஷன் வழங்கப்படவில்லை.

இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த தங்கதுரை, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், நெல்லை மானூர் குப்பனாபுரத்தை சேர்ந்த கோவில்பிள்ளை மகன் எலியாஸ் பிரேம்குமார் (31) என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று எலியாஸ் பிரேம்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு லேப்டாப், ஒரு செல்போன், 9 சிம் கார்டுகள், 61 ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் 12 போலி ரப்பர் ஸ்டாம்புகளை பறிமுதல் செய்தனர். எலியாஸ் பிரேம்குமார் பல்வேறு நிறுவனங்களின் பெயரில் பல வங்கிகளில் 21 வங்கி கணக்குகளை மோசடிக்காக பயன்படுத்தி உள்ளார். அந்த வங்கி கணக்குகளில் சுமார் ரூ.25 கோடி பண பரிவர்த்தனை நடந்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து எலியாஸ் பிரேம்குமார் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story