கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது
திருமணம் செய்து கொள்ளும்படி கல்லூரி மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
செய்யாறு
செய்யாறு தாலுகா மதுரை கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 34). இவர் செய்யாறு பஸ் நிலையம் அருகே உள்ள சூப்பர் மார்க்கெட் கடையில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் கல்லூரிக்கு செல்லும் ஒரு மாணவியை பின்தொடர்ந்து சென்று வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதற்கு மாணவி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி மாணவி வீட்டுக்கு சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி மீண்டும் தொல்லை கொடுத்துள்ளார்.
மேலும் மறுப்பு தெரிவித்தால் மாணவியின் பெற்றோரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் அனக்காவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்னியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியப்பனுக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.