2 டன் ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது
வாலிபர் கைது
பவானி அருகே 2 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தீவிர கண்காணிப்பு
பவானி பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு, வெளி மாநிலத்தவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உத்தரவின்பேரில், போலீசார் நேற்று முன்தினம் பவானி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் 2 மூட்டைகளுடன் வாலிபர் ஒருவர் வந்து கொண்டு இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவருக்கு தெரியாமல் பின்தொடர்ந்து சென்றனர்.
ரேஷன் அரிசி
அவர், பவானி காடையாம்பட்டி பகுதிக்கு சென்று அங்குள்ள ஒரு கொட்டகையில் 2 மூட்டைகளையும் இறக்கி வைத்தார். இதைப்பார்த்த போலீசார் அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்து, அங்கு சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. மொத்தம் 1,900 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பவானி குருப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த தாமோதரன் (33) என்பதும், அவர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து, அதை வெளி மாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் தாமோதரனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1,900 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட்டினையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.