குமரி மாவட்ட வனப்பகுதியில் முயல்களை வேட்டையாடிய வாலிபர் கைது; மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
குமரி மாவட்ட வனப்பகுதியில் முயலை வேட்டையாடியதாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை வனத்துறையினர் தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட வனப்பகுதியில் முயலை வேட்டையாடியதாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 2 பேரை வனத்துறையினர் தேடி வருகிறார்கள்.
வாலிபர் சிக்கினார்
குமரி மாவட்ட வன அதிகாரியும், வன உயிரின காப்பாளருமான இளையராஜாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவி வன பாதுகாப்பு அதிகாரி சிவகுமார் மேற்பார்வையில் பூதப்பாண்டி வனச்சரக அதிகாரி ரவீந்திரன் தலைமையில் வனக்காப்பாளர்கள் அசோக், முத்துராமலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, சங்கரபாண்டி, வேட்டை தடுப்பு காவலர்கள் சிராஜ், சரவணன், ஜெகன் மற்றும் சிவதணிகைவேலன் ஆகியோர் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டது.
இவர்கள் பூதப்பாண்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சரக பகுதிகளில் காட்டு முயல்களை வேட்டையாடியதாக நெல்லை மாவட்டம் வடக்கு வள்ளியூரைச் சேர்ந்த அருண் (வயது 25) என்பவரை நேற்று காலை நாகர்கோவில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
கைது- சிறை
இதில் சில மாதங்களுக்கு முன்பு தனது நண்பர்கள் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த பிரகாஷ் (26), பிரபு (26) ஆகியோருடன் சேர்ந்து காட்டு முயல் வேட்டையாடியதாக ஒப்புக்கொண்டார். மேலும் அருண் வேரேனும் காட்டு விலங்குகளை வேட்டையாடினாரா? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை செய்ததில் கடந்த மாதம் 12-ந் தேதி பூதப்பாண்டி வனச்சரகத்தில் கண்ணி வெடி வைத்து வாய் சிதறிய நிலையில் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்தில் இறந்து கிடந்த காட்டுப்பன்றி ஒன்றை கைப்பற்றி ஆளில்லாத வழக்காக பதிவு செய்யப்பட்ட சம்பவத்தை அருண் ஒப்புக்கொண்டார்.
எனவே காட்டுப் பன்றி இறந்த வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளதாலும், மேலும் காட்டு முயல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாலும் நேற்று அவரை 2 வழக்குகளிலும் வனத்துறை அதிகாரிகள் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் உடந்தையாக இருந்த பிரபு, பிரகாஷ் ஆகியோர் தேடப்பட்டு வருகிறார்கள்.