கடலூரில் போலி அரசாங்க முத்திரையை பயன்படுத்தி கட்டிட அனுமதி வழங்கிய வாலிபர் கைது
கடலூரில் போலி அரசாங்க முத்திரையை பயன்படுத்தி கட்டிட அனுமதி வழங்கிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
கடலூர் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் முரளி கடலூர் புதுநகர் போலீசில் புகார் மனு அளித்தார். அதில், கடலூர் மஞ்சக்குப்பம் சண்முகம் பிள்ளை தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் முருகன் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு கடலூர் முதுநகர் இருசப்பன் தெருவை சேர்ந்த நாகலிங்கம் என்பவருக்காக வழங்கிய திட்ட மற்றும் கட்டிட அனுமதி போலியானது என்றும், இந்த அனுமதியை கடலூர் ஆணைக்குப்பத்தை சேர்ந்த தெய்வீகன் மகன் சேதுபாரதி (வயது 34) என்பவர் போலியான அரசாங்க முத்திரை, போலியான எண் போட்டு, கடலூர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குனரின் போலியான கையொப்பம் போட்டு மனை பிரிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும் அந்த ஆவணங்களை சரிபார்த்து, மாநகராட்சியில் ஒப்புதல் செய்து சரிபார்க்கப்பட்டதில், போலியான சீல் வைத்து, கையொப்பம் போட்டு ஆவணங்களை கொடுத்ததாக புகார் தெரிவித்தார். அதன்பேரில் சேதுபாரதி மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.