10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
வேதாரண்யம் அருகே 10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே 10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
10-ம் வகுப்பு மாணவி
வேதாரண்யத்தை சேர்ந்த 15 வயதுள்ள 10-ம் வகுப்பு மாணவி கடந்த ஜனவரி மாதம் வீட்டில் இருந்த போது மாயமானார். இது குறித்து மாணவியின் பெற்றோர் வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வந்தனர்.
2 மாத கர்ப்பம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் காணாமல் போன மாணவி தனது காதலனுடன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் அவர்களை வேதாரண்யம் போலீசார் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மாணவியை அழைத்து சென்றது அதே ஊரை சேர்ந்த சரத்குமார்(வயது 24) என்பதும், அவர் மாணவியை திருமணம் செய்து தற்போது மாணவி 2 மாத கர்ப்பமாக இருப்பதும், கடந்த 6 மாதங்களாக அவர்கள் சேலத்தில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வேதாரண்யம் போலீசார் சரத்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஜாமீனில் வெளியே வந்தவர்
மாணவியை திருமணம் செய்த சரத்குமார் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு தற்போது கூலி வேலை செய்து வந்துள்ளார். மேலும் இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தவர் கோர்ட்டில் ஆஜர் ஆகாததால் அவர் மீது கோர்ட்டு பிடிவாரண்ட் உள்ளது குறிப்பிடத்தக்கது.