மதுபோதை தகராறில் கொலை செய்த வாலிபர் கைது


மதுபோதை தகராறில் கொலை செய்த வாலிபர் கைது
x

திருச்சியில் தொழிலாளி சாவில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

திருச்சியில் தொழிலாளி சாவில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அழுகிய நிலையில் பிணம்

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே மெக்டொனால்டு சாலையில் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் எதிரே ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஆம்னி பஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. தற்போது, இந்த பஸ் நிலையம் மூடப்பட்டுள்ளது. இங்குள்ள பாழடைந்த கழிவறை கட்டிடத்தில் நேற்று முன்தினம் பகல் 2 மணி அளவில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக அந்த பகுதியினர் கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் உதவி கமிஷனர் கென்னடி, இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். இறந்து கிடந்தவரின் பின்னந்தலையில் காயம் இருந்தது. மேலும், அவர் அணிந்து இருந்த சட்டைப்பையில் ஓட்டுனர் உரிமம் இருந்தது. அதை எடுத்து பார்த்தபோது அவர், கே.கே.நகர் நேதாஜிநகரை சேர்ந்த ரமேஷ் (வயது 41) என்பதும், இவர் செப்டிக் டேங்க் கிளீனிங் செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

மதுபோதையில் கொலை

இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் அவர் சாவில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் மதுபோதையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

கடந்த 9-ந் தேதி ரமேஷ் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, உறவினரான நாகமங்கலம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த ஆறுமுகத்துடன் (29) சேர்ந்து அந்த பகுதியில் மதுஅருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே திடீர் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆறுமுகம், ரமேஷை கொலை செய்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் கூறுகையில், ரமேசுக்கும், ஆறுமுகத்துக்கும் அவ்வப்போது சிறு, சிறு தகராறு வருவது வழக்கம். அப்போதெல்லாம் ரமேஷ் ஆறுமுகத்தை மிரட்டி வந்துள்ளார். இதை ஆறுமுகம் மனதில் வைத்து கொண்டு இருந்துள்ளார். சம்பவத்தன்று இருவரும் ஒன்றாக மதுஅருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் திடீர் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் ரமேஷை தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார் என்றனர். இதையடுத்து கண்டோன்மெண்ட் போலீசார் ஆறுமுகத்தை கைது செய்தனர்.


Next Story