பிறந்த நாள் விழாவுக்கு வரவழைத்து நர்சிங் மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது
மண்டைக்காட்டில் பிறந்தநாள் விழாவுக்கு வரவழைத்து நர்சிங் மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குளச்சல்:
மண்டைக்காட்டில் பிறந்தநாள் விழாவுக்கு வரவழைத்து நர்சிங் மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நர்சிங் மாணவி
நெல்லை மாவட்டம் சீவலப்பேரி மடத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 25). இவருடைய அக்காளை குமரி மாவட்டம் மண்டைக்காட்டில் உள்ள ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
சிவகுமார் வேலை விஷயமாக தன்னுடைய அக்காள் வீட்டில் வந்து தங்கினார். பிறகு அங்கிருந்து தினமும் படகு கட்டும் கூடத்தில் பணிக்கு சென்று வந்தார். சிவகுமாரின் உறவினரான 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் ஹோமில் தங்கி படித்து வந்தார். இவர் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் குலசேகரன்நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
இந்தநிலையில் சிவகுமார், தன்னுடைய அக்காள் பிறந்த நாள் விழா மண்டைக்காட்டில் உள்ள வீட்டில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கண்டிப்பாக பங்கேற்க வர வேண்டும் என மாணவியிடம் இனிக்க, இனிக்க பேசியுள்ளார்.
பலாத்காரம்
இதனை நம்பிய மாணவி பிறந்த நாள் விழாவுக்கு சென்றுள்ளார். ஆனால் அந்த சமயத்தில் வீட்டில் யாரும் இல்லை. சிவகுமார் மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்தநிலையில் வீட்டுக்கு வந்த மாணவிக்கு சிவகுமார் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். இதனை குடித்த சிறிது நேரத்தில் மாணவி மயக்கமடைய சிவகுமார் அவரை பலாத்காரம் செய்தார்.
மயக்கம் தெளிந்ததும் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக சிவகுமார் சமாதானப்படுத்தியுள்ளார்.
வாலிபர் கைது
இந்தவிவகாரத்தில் சிவகுமாரின் தந்தை பால்ராஜ் (55) மாணவியை தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் திருமணத்துக்கும் சிவகுமார் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவி குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சிவகுமார் மற்றும் அவரது தந்தை பால்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடிவந்தனர்.
இந்தநிலையில் தலைமறைவாக இருந்த சிவகுமார், பால்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.