மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது
வேலூர் சைதாப்பேட்டையில் மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி. திருமணம் ஆகாத இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் மூதாட்டி வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கி கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட அதே பகுதியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் மாலை 4 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். பின்னர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சத்தம் போட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். அப்போது வாலிபர் எதிர்பாராத வேளையில் பொதுமக்களிடம் இருந்து தப்பியோடினார்.
இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று மூதாட்டி மற்றும் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். அதில் மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது அதே பகுதியை சேர்ந்த கவுஸ்பாஷா என்று தெரிய வந்தது. இதையடுத்து தப்பியோடிய வாலிபரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை அவர் வேலூர் புதிய பஸ்நிலையத்தில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று கவுஸ்பாஷாவை கைது செய்தனர்.