மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
நாகர்கோவிலில் பாலியல் தொல்லைக்கு ஆளான 10-ம் வகுப்பு மாணவி பள்ளியில் மயங்கி விழுந்தார். இதுதொடா்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் பாலியல் தொல்லைக்கு ஆளான 10-ம் வகுப்பு மாணவி பள்ளியில் மயங்கி விழுந்தார். இதுதொடா்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மயங்கி விழுந்த மாணவி
ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தனது தாயார், சகோதரனுடன் வசித்து வருகிறாா். அந்த சிறுமி நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்தார். உடனே அந்த மாணவிக்கு ஆசிரியர்கள் முதலுதவி அளித்தனர்.
பின்னர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சிறுமி கூறிய தகவல்களை கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதாவது, சம்பவத்தன்று மாணவியின் தாயார் கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் சிறுமியும், சகோதரனும் இருந்துள்ளனர்.
பாலியல் தொல்லை
இந்தநிலையில் தொழிலாளியாக வேலை பார்த்த சதீஷ்குமார் (வயது 33) என்பவர் மாணவி வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு சதீஷ்குமாருக்கும் சிறுமியின் சகோதரருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து சிறுமியின் சகோதரர் வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
பின்னர் வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு சதீஷ்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பயந்துபோன அவர் நடந்த சம்பவத்தை வெளியே சொல்லாமல் இருந்து வந்தார்.
அதன்பிறகும் மாணவிக்கு சதீஷ்குமார் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி பள்ளியில் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தது தெரியவந்தது.
வாலிபர் கைது
பின்னர் ஆசிரியர்கள் நடந்த சம்பவத்தை மாணவியின் தாயாரிடம் தெரிவித்தனர்.மேலும் இதுதொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து சதீஷ்குமார் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை ஜெயிலில் அடைத்தனர்.
பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவி பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்ததால் குட்டு அம்பலமாகி வாலிபர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.