நாகர்கோவிலில் பட்டப்பகலில் துணிகரம்: மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறித்த வாலிபர் கைது


நாகர்கோவிலில் பட்டப்பகலில் துணிகரம்: மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறித்த வாலிபர் கைது
x

நாகர்கோவிலில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தங்கச்சங்கிலி பறிப்பு

நாகர்கோவில் கோட்டார் கஸ்தூரி நகரை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி பாப்பா (வயது 55). இவருடைய தாயார் ஆவுடையமமாள் (85). இவர் கோட்டார் சமரசவீதியில் உள்ள மகன் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் 3 நாட்களுக்கு முன்பு ஆவுடையம்மாள், பாப்பா வீட்டுக்கு வந்தார். அங்கு ஒரு அறையில் காலை 10.30 மணி அளவில் அவர் தூங்கிக் கொண்டிருந்தார். பாப்பா சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த கோட்டார் சமரசவீதியை சேர்ந்த கண்ணன் (23) என்பவர் வீட்டுக்குள் புகுந்து ஆவுடையம்மாள் கழுத்தில் கிடந்த மூன்று பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆவுடையம்மாள் தங்கச் சங்கிலியை கையால் பிடித்துக் கொண்டு, திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இதனால் சமையலறையில் இருந்து பாப்பா ஓடிவந்தார். அதற்குள் தங்கசங்கிலியை பறிக்க விடாமல் தடுக்க ஆவுடையம்மாள் நடத்திய போராட்டத்தில் அவர் கையில் சங்கிலியின் ஒரு பகுதி அதாவது 10 கிராம் எடையுள்ளதும், கண்ணன் கையில் 14 கிராம் எடையுள்ள சங்கிலியின் மற்றொரு பகுதியும் சிக்கியது. கிடைத்த நகையை பறித்துக் கொண்டு கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

கைது

இது குறித்து பாப்பா கோட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி கண்ணனை கைது செய்தனர்.


Next Story