6¼ பவுன் நகை-ரூ.56 ஆயிரம் திருடிய வாலிபர் கைது


6¼ பவுன் நகை-ரூ.56 ஆயிரம் திருடிய வாலிபர் கைது
x

தனியார் வங்கி உதவி மேலாளர் வீட்டில் 6¼ பவுன் நகை - ரூ.56 ஆயிரம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

தனியார் வங்கி உதவி மேலாளர் வீட்டில் 6¼ பவுன் நகை - ரூ.56 ஆயிரம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

உதவி மேலாளர்

திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் முனிஸ்வரன் கோவிலை சேர்ந்தவர் ஜான்பால்ராஜ் (வயது 36) தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் 2 வீடுகளை வாடகைக்கு எடுத்து குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் அக்காலின் திருமணத்திற்காக ஒரு வீட்டின் பீரோவில் நகைகளை வைத்துவிட்டு, மற்றொரு வீட்டில் தூங்கினார். இதைத்தொடர்ந்து நேற்று காலை 7 மணிஅளவில் தூங்கி எழுந்து அந்த வீட்டுக்கு சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 6¼ பவுன் நகைகளையும், ரூ.56 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. . இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கைது

இதில் பாலக்கரை கூனிபஜாரை சேர்ந்த சதீஸ் என்கிற முத்துபாண்டி (20) என்பவர் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றி சம்பவம் நடந்த 6 மணி நேரத்திற்குள் திருட்டு ஆசாமியை கைது செய்த இன்ஸ்பெக்டர் நிக்சன் மற்றும் தனிப்படையினரை திருச்சி மாநகர கமிஷனர் காமினி பாராட்டினார்.

ஜவுளி வியாபாரிக்குகொலை மிரட்டல்

*திருச்சி ஸ்ரீரங்கம் சந்திரா நகரை சேர்ந்தவர் மனோஜ் குமார் (27). இவர் பெரிய கடைவீதி பகுதியில் ஜவுளி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது கடை முன்பு ரோட்டில் நெல்லையை சேர்ந்த சற்று மனநலம் பாதிக்கப்பட்ட காஜா மொய்தீன் (40) என்பவர் பனியன் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் மனோஜ் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி கீழே கிடந்த கல்லை எடுத்து காண்பித்து ஏற்கனவே நான் ஒருவனை கல்லால் அடித்துக் கொன்றுள்ளேன். அதேபோல உன்னையும் கொன்று விடுவேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டாராம். இதுகுறித்து மனோஜ் குமார் கோட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுவிற்றவர் கைது

*மணிகண்டம் அருகே நாகமங்கலம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதாக தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த ராஜேஷ் (40) என்பவரை மணிகண்டம் போலீசார் கைது செய்தனர்.

கடைகளுக்கு சீல்

*திருச்சி ஆயில் மில் செக் போஸ்ட் பகுதியில் உள்ள குமார் பீடா ஸ்டால் மற்றும் மதுரை ரோடு, நத்தர்ஷா பள்ளிவாசல் தெரு, கதீஜா பெட்டி கடையில் புகையிலை பொருட்கள் விற்று வந்துள்ளனர். இந்த நிலையில் 2 கடைகளையும் திருச்சி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினர் சீல் வைத்தனர்.


Next Story