விவசாயியிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
சாணார்பட்டி அருகே, விவசாயியிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சாணார்பட்டி அருகே உள்ள மணியக்காரன்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 33). விவசாயி. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர், அப்பகுதியில் நடந்த திருவிழாவில் பங்கேற்று விட்டு தனது வீட்டு திண்ணையில் படுத்தியிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர், தினேஷின் செல்போனை திருடி சென்று விட்டார்.
இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் தினேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் செல்போனின் சிக்னல் குறித்து போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த செல்போனை, மணியகாரன்பட்டி அருகே உள்ள வையாளிபட்டியை சேர்ந்த முத்துக்காமாட்சி (வயது 32) என்பவர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தினேஷிடம் செல்போனை திருடி, முத்துக்காமாட்சி உபயோகப்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து முத்துக்காமாட்சியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து தினேஷ் செல்போன் உள்பட, மேலும் 2 பேரிடம் திருடிய 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.