மின் மோட்டாரை திருடிய வாலிபர் கைது
மின் மோட்டாரை திருடிய வாலிபர் கைது
தக்கலை:
தக்கலை அருகே உள்ள அழகியமண்டபத்தில் துணிக்கடை நடத்தி வருபவர் செல்வராஜ் (வயது 55). இவருடைய மகள் நாகர்கோவிலில் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு முளகுமூடு அருகே மைனாவிளையில் உள்ளது. நேற்று முன்தினம் செல்வராஜ் மகளின் தோட்டத்துக்கு சென்றார். அப்போது, தோட்டத்தில் உள்ள கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார் மாயமாகி இருந்தது. யாரோ மர்ம நபர் மின் மோட்டாரை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செல்வராஜ் தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலையில் அழகியமண்டபத்தில் உள்ள பழைய இரும்பு கடைக்கு ஒருவர் மின்மோட்டாரை விற்பனைக்கு கொண்டு வந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாக்கில் மறைத்து வைத்திருந்த மின்மோட்டாருடன் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் வயக்கரை பகுதியை சேர்ந்த அய்யாத்துரை(35) என்பதும், செல்வராஜின் மகள் தோட்டத்தில் மின்மோட்டாரை திருடியதும், இவர் மீது ஏற்கனவே ஒரு திருட்டு வழக்கு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மின்மோட்டாரை பறிமுதல் செய்து அய்யாத்துரையை கைது செய்தனர்.