திண்டிவனம் பகுதியில் கோவில்களில் திருடிய வாலிபர் கைது
திண்டிவனம் பகுதியில் கோவில்களில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
திண்டிவனம்,
திண்டிவனம் சுற்று வட்டார பகுதிகளில் கோவில் உண்டியலை உடைத்து தொடர் திருட்டு நடைபெற்று வந்தது. இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார். இந்த தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு ஓங்கூர் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை மறித்து சோதனை செய்ததில் அதில் ஆம்ப்ளிபையர், ஸ்பீக்கர், இன்வெட்டர், எல்.இ.டி. டி.வி. உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. இதையடுத்து ஆட்டோவை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் புதுச்சேரி மாநிலம் சாரம், சக்தி நகரை சேர்ந்த முருகேசன் மகன் தமிழ்மணி (34) என்பதும், புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் கருமாதி கொட்டகை முன்பு நின்றிருந்த ஆட்டோ, கோட்டக்குப்பம் பர்கத் நகரில் வீட்டின் முன் நின்றிருந்த ஆட்டோ ஆகியவற்றை திருடி அதனை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் இதில் ஒரு ஆட்டோவில் ஒலக்கூர் அடுத்த சாரம் பகுதியில் உள்ள தேவாலயத்தின் பூட்டை உடைத்து அங்கிருந்த ஆம்ப்ளிபையர், ஸ்பீக்கர், மைக் செட், லேப்டாப் ஆகியவற்றையும், ஜெயந்தி என்பவருடைய வீட்டை உடைத்து எல்.இ.டி. டிவி, சிலிண்டர், அடுப்பு, லேப்டாப், இன்வெட்டர் ஆகியவற்றை திருடி வந்ததும் தெரியவந்தது. இதேபோல் மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு ரெயில் நிலையம் அருகே உள்ள பிள்ளையார், ஜக்காம்பேட்டை பிள்ளையார், தென் பசார் முத்துமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களின் உண்டியலை உடைத்து பணம் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து தமிழ்மணியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.