சிறுமியிடம் நகை பறித்த வாலிபர் கைது
குறும்பனையில் திருமண மண்டபம் முன்பு சிறுமியிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குளச்சல்,
குறும்பனையில் திருமண மண்டபம் முன்பு சிறுமியிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நகை பறிப்பு
குளச்சல் அருகே உள்ள கோடிமுனை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ஹென்றி ஆஸ்டின் (வயது37). இவருடைய மனைவி டெனிலா (33). இவர் சம்பவத்தன்று தனது 3 வயது மகள் இவாலினாவுடன் குறும்பனையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த உறவினரின் திருமணத்துக்கு சென்றார்.
அங்கு மண்டபத்தின் முன்பு சிறுமி இவாலினா விளையாடிக் ்கொண்டிருந்த போது ஒரு வாலிபர் திடீரென வந்து சிறுமியின் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.
இதுகுறித்து டெனிலா குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
வாலிபர் கைது
மேலும் நகை பறித்த வாலிபரை பிடிக்க இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த வாலிபர் குறித்த துப்பு துலங்கியது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் நகை பறித்தவர் கோணங்காடு அருகே உள்ள குளப்பாடை சேர்ந்த அருண் ஜஸ்டின் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து நகையை மீட்டனர். பின்னர் அருண் ஜஸ்டின் இரணியல் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.