ஏ.டி.எம்.கார்டை மாற்றி ரூ.44 ஆயிரம் திருடிய வாலிபர் கைது
ஆசிரியையிடம் ஏ.டி.எம்.கார்டை மாற்றி கொடுத்து அவரது கணக்கில் ரூ.44 ஆயிரம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை
ஆசிரியையிடம் ஏ.டி.எம்.கார்டை மாற்றி கொடுத்து அவரது கணக்கில் ரூ.44 ஆயிரம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை பாவாஜி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் குபேரன். இவரது மனைவி லதா (வயது 41), அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த ஜூன் மாதம் 26-ந் தேதி இவர் கொசமடை தெரு பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம். கார்டு வைத்து பணம் எடுக்க முயற்சி செய்து உள்ளார்.
ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தில் சிறிது குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் இருந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் உதவுவது போன்று செயல்பட்டு லதாவின் கையில் இருந்த ஏ.டி.எம். கார்டை வாங்கி அதன் எண்ணை தெரிந்து கொண்டு கார்டு சரியாக வேலை செய்யவில்லை என்று அவரிடம் அந்த கார்டை கொடுப்பது போன்று வேறு கார்டை கொடுத்து அனுப்பி உள்ளார்.
இதை அறியாத லதா அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இதை அடுத்து அந்த நபர் லதாவிடம் இருந்து பெற்ற ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி ரூ.44 ஆயிரத்து 500 எடுத்துள்ளார். அது குறித்த குறுஞ்செய்தி லதாவின் செல்போனுக்கு வரவே ஏ.டி.எம்.கார்டை பார்த்தார்.
அப்போது தன்னிடம் உதவுவதுபோல் நடித்து வேறு கார்டை மாற்றிக்கொடுத்து விட்டு அந்த நபர் ரூ.44 ஆயிரத்து 500-ஐ திருடியது தெரியவந்தது. இது குறித்து திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீசில் லதா புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் லதாவிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கி ஏமாற்றியது திருவண்ணாமலை அரடாபட்டு பகுதியை சேர்ந்த பிரதீப் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.