சாமி சிலையை திருடிய வாலிபர் கைது
கோத்தகிரி அருகே பங்களாவில் புகுந்து, சாமி சிலையை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே பங்களாவில் புகுந்து, சாமி சிலையை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தனிப்படை போலீசார்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆளில்லாத சொகுசு பங்களாக்கள், தங்கும் விடுதிகளின் கதவை உடைத்து பொருட்களை மர்ம நபர் திருடி சென்றதாக புகார் வந்தது. அதன் பேரில் கோத்தகிரி போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மர்ம ஆசாமியை தேடி வந்தனர். மேலும் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் ரகுமான்கான் மற்றும் குன்னூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கார்சிலி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசுந்தர், ஈஸ்வரன் ஆகியோர் தங்களது வீடுகளின் கதவை உடைத்து விலை உயர்ந்த பொருட்கள் திருடு போனதாக கோத்தகிரி போலீசில் புகார் அளித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் ரகுமான் கான் மற்றும் போலீசார் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை கரும்பாலம் பகுதியில் வாகன சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படி வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
ரூ.25 ஆயிரம் சிலை
அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், சந்தேகம் அடைந்த போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் சேலம் மாவட்டம் அயோத்தி பட்டினத்தை சேர்ந்தவர் கோகுல்நாத் (வயது 33), கொத்தனார். அவர் தனது மனைவியுடன் கோத்தகிரி காம்பாய்கடை பகுதியில் வசித்து வந்தார். பணிக்கு செல்லும்போது ஆளில்லாத பங்களாக்கள் மற்றும் தனியார் விடுதிகளை நோட்டம் விட்டு வந்து, இரவில் அங்கு சென்று பொருட்களை திருடி வந்து உள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கார்சிலி பகுதியில் சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணசுந்தர் என்பவரது பங்களாவின் கதவை உடைத்து, அங்கிருந்த ரூ.70 ஆயிரம் செல்போன், அதே பகுதியில் திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஈஸ்வரன் (36) என்பவரது பங்களாவில் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பித்தளையில் ஆன 2½ அடி உயர கிருஷ்ணர் சிலையை திருடியது விசாரணையில் தெரிய வந்தது.
கைது
போலீசார் சிலை, செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கோகுல்நாத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோத்தகிரி மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் மீது ஏற்கனவே திருப்பூர் மாவட்டத்தில் 2 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.