மாணவி தற்கொலை வழக்கில் வாலிபர் கைது
தேனி அருகே மாணவி தற்கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தேனி அருகே பின்னத்தேவன்பட்டியை சேர்ந்தவர் இலங்கைராஜா. கூலித்தொழிலாளி. இவருடைய மகள் பாண்டீஸ்வரி (வயது 17). இவர், தேனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 9-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த பாண்டீஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். தற்கொலைக்கு முன்பு அவர் ஒரு கடிதம் எழுதி வைத்து இருந்தார். அதன்பேரில், மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய காதலனான அதே ஊரைச் சேர்ந்த விக்ரம் (வயது 22), அவருடைய தாய் சுதா உள்பட 5 பேர் மீது அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாணவியின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை பிணத்தை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் விக்ரமை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இருப்பினும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 3-வது நாளாக நேற்றும் பிணத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.