தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சேலம்,
வீரபாண்டி காட்டான் தெருவை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 24). இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜியோ இன்டர்நெட் இணைப்புக்காக சோனா நகர் பூங்கா அருகே வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சத்து 92 ஆயிரத்து 600 மதிப்புள்ள 38 இரும்பு கம்பங்களை திருடியுள்ளார். இது தொடர்பாக அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த மோகன்குமார், மோட்டார் சைக்கிள் திருடியதாக சூரமங்கலம் போலீசிலும், கடந்த மாதம் ஜவகர் மில் அருகே அரசு டாஸ்மாக் மதுக்கடையில் துளையிட்டு மதுபானங்களை திருடியதாக அவர் மீது பள்ளப்பட்டி போலீசிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கம்மாள் காலனியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரை மோகன்குமார் மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்து சென்றுள்ளார். எனவே, தொடர்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் மோகன்குமார் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனருக்கு பள்ளப்பட்டி போலீசார் பரிந்துரை செய்தனர். இதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில் மோகன்குமாரை கைது செய்து நேற்று போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார்.