"இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறவேண்டும்" -கலெக்டர் செந்தில்ராஜ் பேச்சு


இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக   மாறவேண்டும் -கலெக்டர் செந்தில்ராஜ் பேச்சு
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

“தூத்துக்குடியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் அரசின் திட்டங்களை பயன்படுத்தி இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும்” என்று கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.

தூத்துக்குடி

"தூத்துக்குடியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் அரசின் திட்டங்களை பயன்படுத்தி இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும்" என்று கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.

வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி வ.உசி. கலைக்கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. முகாமை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தொழில் முனைவோர்களாக...

தூத்துக்குடி மாவட்டத்தில் நிறைய இளைஞர்கள் உள்ளனர். மாணவர்களுக்கு படிப்பு மட்டுமே உதவாது. தங்களுடைய வேலைவாய்ப்பு திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். புதிய தொழில் முனைவோர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நீட்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நிறைய மானியங்கள் தரப்படுகின்றன. அரசின் திட்டங்களை பயன்படுத்தி இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் கவுரவ் குமார், மகளிர் திட்ட இயக்குனர் வீரபத்திரன், கல்லூரி முதல்வர் வீரபாகு, டாடா எலக்ட்ரானிக்ஸ் அலுவலர் ஜெய்சங்கர், வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் ஹரிபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story