தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை அருகே கொத்தம்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான முந்திரி காடு உள்ளது. இங்குள்ள ஒரு மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த பொன்னர் மகன் முருகானந்தம் (வயது 35) என்பது தெரியவந்தது.
மேலும், அவர் கொத்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கோழிப்பண்ணைக்கு செட் அமைக்கும் பணிக்காக வந்த வெல்டர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முருகானந்தம் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முருகானந்தம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.