சரபங்கா ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
எடப்பாடி:-
எடப்பாடி அருகே சரபங்கா ஆற்றில் தவறிவிழுந்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
வாலிபர் ஆற்றில் மூழ்கி பலி
சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம் ஆவணி பேரூர் கீழ் முகம் கிராமம், மசையன்தெருவை சேர்ந்தவர் இப்ராஹிம், எலக்ட்ரீசியன். இவருடைய மகன் இஸ்மாயில் (வயது 19). 12-ம் வகுப்பு வரை படித்துள்ள இஸ்மாயில், அவ்வப்போது தனது தந்தைக்கு உதவியாக அவருடன் வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று வீட்டில் இருந்த இஸ்மாயில், எடப்பாடி நைனாம்பட்டி அருகே உள்ள சரபங்கா ஆற்றின் படித்துறை பகுதியில் நடந்து சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர் ஆற்றுக்குள் தவறி விழுந்தார். இதில் இஸ்மாயில் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
வழக்குப்பதிவு
இது குறித்து தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இஸ்மாயிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் இஸ்மாயில் வசித்து வந்த குடியிருப்பு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் இதே பகுதியில் ஆற்றில் மூழ்கி இறந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து இந்த பகுதியில் வாலிபர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்து வரும் சம்பவம் எடப்பாடி அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.