முத்தையாபுரத்தில் கோஷ்டிமோதலில் வாலிபர் படுகாயம்
முத்தையாபுரத்தில் நடந்த கோஷ்டிமோதலில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகேயுள்ள வேப்பலோடை பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் மாரியப்பன் (வயது34). இவரது உறவினருக்கும், தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த முனியாண்டி மகன் மாரிமுத்து என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில நாட்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கணவன்- மனைவி இருவரும் பிரிந்து விட்டனராம். இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த முன்விரோதத்தில் மாரியப்பன் அவரது நண்பர்கள் 2 பேருக்கும், மாரிமுத்து அவரது நண்பர்கள் 2 பேருக்கும் இடையே கோஷ்டிமோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதில் படுகாயமடைந்த மாரிமுத்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.