போலீஸ் நிலையத்தில் வாலிபர் சாவு: இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் பணியிடை நீக்கம்


போலீஸ் நிலையத்தில் வாலிபர் சாவு: இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் பணியிடை நீக்கம்
x

கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக மாஜிஸ்திரேட்டும் நேரில் விசாரணை நடத்தினார்.

பெரம்பூர்,

சென்னை செங்குன்றத்தை அடுத்த அலமாதி வேட்டைக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 31). இவர் மீது சோழவரம், வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், ஆவடி டேங்க் பேக்டரி, திருமுல்லைவாயல் ஆகிய போலீஸ் நிலையங்களில் 23 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தநிலையில் கொடுங்கையூர் போலீசார் திருட்டு வழக்கு தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜசேகரை கொடுங்கையூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது திடீரென மயங்கி விழுந்த ராஜசேகர், தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

5 பேர் பணியிடை நீக்கம்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் கூடுதல் கமிஷனர் அன்பு, மண்டல இணை கமிஷனர் ராஜேஸ்வரி, புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதி பலியான சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன், தலைமை காவலர்கள் ஜெயசேகர், மணிவண்ணன், போலீஸ்காரர் சத்தியமூர்த்தி ஆகிய 5 பேரை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி தற்போது 5 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

மாஜிஸ்திரேட்டு விசாரணை

மேலும் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. மற்றும் மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. அதன்படி சென்னை கெல்லீசில் உள்ள 12-வது சிறார் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு லட்சுமி நேற்று விசாரணையை தொடங்கினார். கொடுங்கையூர் போலீஸ் நிலையம் மற்றும் ராஜசேகரிடம் போலீசார் விசாரணை நடத்திய எவரெடி காலனியில் உள்ள போலீஸ் பூத் பகுதியிலும் நேரில் விசாரணை நடத்தினார்.

மேலும் பலியான ராஜசேகரின் தாய் உஷாராணி மற்றும் அண்ணன் மணி உள்ளிட்டோர்களிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை செய்தார்.

அப்போது ராஜசேகரின் தாய் உஷாராணி கூறும்போது, "என் மகன் மீது கொடுங்கையூர் போலீசில் வழக்கு எதுவும் இல்லை. ஆனால் வழக்கு தொடர்பாக விசாரிக்க அவனை போலீசார் அழைத்து சென்றனர். எனது மகன் இறந்தது தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் எனக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை. என் மகனை போலீசார் அடித்துக்கொன்று விட்டு வலிப்பு நோய் ஏற்பட்டு இறந்துவிட்டதாக கூறுகிறார்கள். இது போலீசார் செய்த சதி" என்றபடி கதறி அழுதார்.

பிரேத பரிசோதனை

இதையடுத்து மாஜிஸ்திரேட்டு லட்சுமி, பலியான ராஜசேகரின் உடல் வைக்கப்பட்டு இருந்த சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் கைதி ராஜசேகரின் உடலை டாக்டர் பாலசுப்பிரமணியம் பிரேத பரிசோதனை செய்தார்.

மதியம் 2.30 மணி அளவில் தொடங்கிய பிரேத பரிசோதனை மாலை 4.30 மணி அளவில் முடிவடைந்தது. பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே ராஜசேகரின் சாவுக்கு உண்மையான காரணம் என்ன? என்பது தெரிய வரும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடலை வாங்க மறுப்பு

இதற்கிடையில் பிரேத பரிசோதனை முடிந்து ராஜசேகரின் உடலை அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் உரிய நீதி கிடைக்கும் வரையில் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அவரது உறவினர்கள் ராஜசேகரின் உடலை வாங்க மறுத்துவிட்டனர். இதனால் ராஜசேகரின் உடல் ஸ்டான்லி ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் உயிரிழந்த ராஜசேகர் மரணத்துக்கு உரிய நீதி விசாரணை கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பெரம்பூர் பகுதி செயலாளர் விஜயகுமார் தலைமையில் கொடுங்கையூர் போலீஸ் நிலையம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு போலீசாருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் ராஜசேகரின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தமிழக அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.


Next Story