3 மாதங்களில் 16 இளம்வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 16 இளம்வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
குழந்தைகள் பாதுகாப்புகுழு கூட்டம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குழந்தைகள் தொடர்பான பாதுகாப்பு மற்றும் பள்ளிகளில் செயல்படுத்த வேண்டிய விழிப்பணர்வு கூட்டங்களை நடத்திட துறை வாரியாக அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கலெக்டர் எடுத்துரைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 16 இளம்வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இளம்வயது திருமணம் செய்பவர்களுக்கும், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் காவல்துறையினர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டணமில்லா தொலைபேசி
மேலும் பொதுமக்களும் இளம்வயது திருமணம், குழந்தைத் தொழிலாளர் பணியில் ஈடுபடுவது, பள்ளிக்கு அருகில் தடைசெய்யப்பட்ட போதைபொருள் விற்பது மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தங்கள் பகுதியில் நடப்பதாக தெரிந்தால் உடனடியாக 1098 என்ற கட்டணமில்லா இலவச தொலைபேசி எண் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு 94861 11098 என்ற எண்ணிற்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் கொடுப்போரின் ரகசியம் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார், மாவட்ட சமூகநல அலுவலர் கீதா, உதவி ஆணையர் (தொழிலாளர் நலன்) திருநந்தன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) பூங்கொடி உள்பட அரசுத்துறை அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.