இளைஞா்கள் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வேண்டுகோள்


இளைஞா்கள் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும்  போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வேண்டுகோள்
x
தினத்தந்தி 25 Nov 2022 6:45 PM GMT (Updated: 25 Nov 2022 6:47 PM GMT)

இளைஞர்கள் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும் என குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

இளைஞர்கள் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும் என குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரத்ததான முகாம்

குமரி மாவட்ட போலீசார் சார்பில் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கான ரத்ததான முகாம் நேற்று காலையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முகாமை தொடங்கி வைத்து ரத்ததானம் செய்தார்.

தொடர்ந்து நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார், இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன், ராமர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஆயுதப்படை போலீசார் என மொத்தம் 70 பேர் ரத்ததானம் செய்தனர். முகாமில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர்.

இளைஞர்கள் முன்வர வேண்டும்

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-

உயிர் காக்கும் மருத்துவத்தில் மிகவும் முக்கியமானது ரத்த தானம். குறைந்தது 6 மாதங்களுக்கு ஒரு முறை ரத்ததானம் செய்வது நல்லது. இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை. ரத்ததானம் செய்வதால் நம்மை அறியாமலேயே ஒரு உயிர் காக்கும் செயலில் நாம் ஈடுபடுகிறோம்.

ரத்ததானம் செய்வதால் நமது உடல் புத்துணர்ச்சி பெறும். புதிய ரத்த அணுக்கள் உருவாகும். எனவே இளைஞர்கள் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story