ஈரோட்டில் இளைஞர் திறன் திருவிழா
ஈரோட்டில் இளைஞர் திறன் திருவிழாவை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
ஈரோடு:
ஈரோட்டில் இளைஞர் திறன் திருவிழாவை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
இளைஞர் திறன் திருவிழா
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர் திறன் திருவிழா தொடக்க விழா ஈரோடு கலை அறிவியல் கல்லூாியில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், இ.திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு இளைஞர் திறன் திருவிழாவை தொடங்கி வைத்து திறன் வளர்ப்பு பயிற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வேலை வாய்ப்பு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'இளைஞர் திறன் திருவிழா' திட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி தொடங்கி வைத்தார். அதன்படி தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம், பிரதமர் கவுல்ய விகாஸ் யோஜனா, மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு கழகம் உள்ளிட்ட திட்டங்களின் மூலமாக சி.என்.சி. ஆபரேட்டர், ஜ.எஸ்.டி. கணக்காளர், சீவிங் மிஷின் ஆபரேட்டர், அலங்கார ஆடை வடிவமைப்பு, அழகுக்கலை, உதவி செவிலியர், கணினி சில்லறை விற்பனை வணிகம், பி.பி.ஓ. பணி, துரித உணவு தயாரித்தல் போன்ற இலவச திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
இதில் தனியார் நிறுவனங்களில் 100 சதவீதம் வேலை வாய்ப்பு மற்றும் சுய தொழில் செய்வதற்கு வசதியாக அரசு மானியத்துடன் கடன் உதவி வழங்கவும், இலவச திறன் பயிற்சிகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் வகையிலும் இளைஞர் திறன் திருவிழா நடைபெறுகிறது.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
சான்றிதழ்கள்
விழாவில் திறன் வளர்ப்பு பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 21 பேருக்கும், பயிற்சி முடித்த 2 பேருக்கும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் சுற்றுக்சூழல் மற்றும் சமூக மேலாண்மை பயிற்சி பெற்ற 6 பேருக்கும் சான்றிதழ்களை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார். தொடர்ந்து ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாவட்டதொழில் மையம், ஈடிசியா, மகளிர் திட்டம் ஆகியன சார்பில் அமைக்கப்பட்டு இருந்த திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் இணையதளத்தில் பதிவு செய்யும் பணியை அவர் பார்வையிட்டார்.
இந்த விழாவில் மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மகளிர் திட்ட இயக்குனர் கெட்சிலீமாஅமலினி, முதலியார் கல்வி அறக்கட்டளை தலைவர் ராஜமாணிக்கம், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குனர் வெங்கடாசலம், முதல்வர் சங்கர சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.