போலீசாரால் தேடப்பட்ட வாலிபர், விழுப்புரம் கோர்ட்டில் சரண்
செங்கல்பட்டு பா.ம.க. நிர்வாகி கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் விழுப்புரம் கோர்ட்டில் சரணடைந்தார்.
விழுப்புரம்:
செங்கல்பட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 46). இவர் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ம.க. நகர செயலாளராக இருந்தார். அங்குள்ள மணிக்கூண்டு பகுதியில் பூக்கடையும் நடத்தி வந்தார். கடந்த 9-ந் தேதி இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 7 பேர் கொண்ட கும்பல், நாகராஜை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
வாலிபர் சரண்
இச்சம்பவத்தில் தொடர்புடைய செங்கல்பட்டு கே.கே. தெருவை சேர்ந்த அஜய் என்கிற சிவப்பிரகாசம் (22) என்பவரை செங்கல்பட்டு டவுன் போலீசார், துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தனர். அதன் பின்னர் இச்சம்பவம் தொடர்பாக கார்த்திக், சூர்யா, விஜி, தினேஷ், மாரி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு அருகே நத்தம் பகுதியை சேர்ந்த காதர்பாஷா மகன் அன்வர்உசேன் (வயது 30) என்பவரை போலீசார், பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த அன்வர்உசேன், நேற்று மதியம் விழுப்புரம் 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து நீதிபதி அகிலா உத்தரவின்பேரில் அன்வர்உசேன் சிறையில் அடைக்கப்பட்டார்.