மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


மாணவியை கடத்தி திருமணம் செய்த  வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x

பிளஸ்-2 தேர்வு எழுத வந்த மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

ஆரணி

தஞ்சாவூர் மாவட்டம் சத்துவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட் என்பவரின் மகன் செல்வம் (வயது 21), யூடியூப் சேனல் மூலம் செல்போனில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

செல்வம் பதிவு செய்து வந்த வீடியோக்களை ஆரணி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் 17 வயது மாணவி தினமும் பார்த்து பதில் போட்டு வந்துள்ளார். இதன் மூலம் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளது.

இந்த நிலையில் ஆரணி வந்த செல்வம் கடந்த 29-ந் தேதி பிளஸ்-2 தேர்வு எழுத வந்த மாணவியை கடத்திச் சென்றுள்ளார்.

தேர்வு எழுத சென்ற மகள் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் சைபர் கிரைம் பிரிவில் மாணவியின் செல்போன் மூலம் அவர் ஜெயங்கொண்டம் அருகே இருப்பது தெரிந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷாபுதீன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர் விரைந்து சென்று இருவரையும் ஆரணிக்கு அழைத்து வந்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, மாணவியை வாலிபர் தாலி கட்டி திருமணம் செய்தது தெரிந்தது.

இதையடுத்து மைனர் பெண்ணை திருமணம் செய்து கொள்வது தவறு என்பதை உணர்த்தி செல்வம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பள்ளி மாணவியை சமரசம் செய்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.


Next Story