கல்லூரி மாணவியை காரில் கடத்திய வாலிபர் கைது
திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவியை காரில் கடத்திய வாலிபர் கைது
முத்துப்பேட்டை:
திருமணம் நிச்சயிக்கப்பட்ட கல்லூரி மாணவியை காரில் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கல்லூரி மாணவி
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தஞ்சை மவட்டத்தில் உள்ள ஒரு ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பி.எட். படித்து வருகிறார். இவருக்கும் ஒரு வாலிபருக்கும் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கல்லூரி மாணவி வழக்கம்போல் நேற்று காலை ஊரிலிருந்து கல்லூரிக்கு சென்று விட்டு மாலை கல்லூரி முடிந்ததும் பஸ்சில் முத்துப்பேட்டைக்கு வந்துள்ளார். அங்கிருந்து ரெயில்வே நிலையம் சாலையில் மினி பஸ் ஏறுவதற்காக சென்றுகொண்டிருந்தார்.
கடத்தல்
அப்போது மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று மாணவியின் அருகே நின்றது. காரிலிருந்து இறங்கிய இரண்டு வாலிபர்கள் மாணவியின் வாயை பொத்தி காருக்குள் தள்ளி விட்டு கடத்தி சென்றுள்ளனர். அப்போது மாணவி கூச்சலிட்டார். இதனையடுத்து அப்பகுதியில் மக்கள் கூடினர். ஆனாலும் கார் அங்கிருந்து தப்பியது.
உடனே முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து கடத்திய மாணவியையும், கடத்தியவர்களையும் பிடிக்க போலீசார் தீவிர தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த கடத்தல்காரர்கள் கோவிலூர் அருகே கடத்தப்பட்ட மாணவியை காரிலிருந்து இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.
போலீஸ் விசாரணை
இந்த சம்பவம் குறித்து மாணவி முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸ்இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் மாணவியை கடத்தியவர்களை தேடி வந்தனர். இதில் மாணவியை கடத்தியது தில்லைவிளாகம் தெற்குகாடு பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் மணிகண்டன் (வயது 32) கண்ணபிரான் மகன் அர்ச்சுனன் (38) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீசார் அவரை திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட அர்ச்சுனன் மற்றும் சிலரையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கல்லூரி மாணவி எதற்காக கடத்தப்பட்டார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.