இளைஞர்கள் நெசவு பயிற்சி திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்


இளைஞர்கள் நெசவு பயிற்சி திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
x

தஞ்சை மாவட்டத்தில் இளைஞர்கள் நெசவு பயிற்சி திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் கூறி உள்ளார்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் இளைஞர்கள் நெசவு பயிற்சி திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் கூறி உள்ளார்.

நெசவு பயிற்சி திட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டவாறு இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து வேலைவாய்ப்பு வழங்குதல் (அல்லது) தொழில் முனைவோர்களாக உருவாக்குதல்,

பாரம்பரியமான கைத்தறி தொழிலை அதனுடைய பழமை மாறாமல் புத்துயிரூட்டுவது. கிராமப்புறத்திலுள்ள இளைஞர்களும் கைத்தறி தொழிலை ஒரு தொழிலாக அவர்கள் பகுதியிலேயே ஆரம்பிப்பது, வேலையில்லாத இளைஞர்களுக்கு தொழில் தொடர்பாக குறுகியகால பயிற்சி அளிப்பது, 2023-2024-ல் முதற்கட்டமாக 300 இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளிப்பது. கைத்தறி நெசவில் நெசவுத் தொழில் நுட்பங்களை பயிற்சியின் வாயிலாக கற்பித்தல். இப்பயிற்சியின் வாயிலாக கைத்தறி பொருட்களின் உற்பத்தியில் தரத்தையும் அளவையும் மேம்படுத்துதல் ஆகியவை ஆகும். பயிற்சியில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.250 வீதம் பயிற்சி காலம் முடியும் வரை ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கலாம்

இப்பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். கைத்தறிகளை இயக்குவதற்கு தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும். எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயிற்சியில் சேர விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.loomworld.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். அல்லது இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) துகிலி அம்மாப்பேட்டை கஸ்தூரி பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் நடைபெறும் விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story