அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் திடீர் தர்ணா
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு
மத்திய அரசு 'அக்னிபாதை' திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய இந்திய பாதுகாப்பு பிரிவிற்கு 17½ வயது முதல் 21 வயதுடைய இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அக்னிபாதை திட்டத்தில் அக்னிவீரர்களாக தேர்வு செய்யப்படும் நபர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிய முடியும்.
பின்னர் அவர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே திறமைமிக்க பணிக்கு ஏற்ப சிப்பாயாக நிரந்தர பணிக்கு எடுத்து கொள்ளப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
அக்னிபாதை திட்டத்தின்கீழ் முப்படைகளுக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராணுவத்தில் சேருவதற்காக பயிற்சி பெற்று வரும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அவர்கள் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் ஒன்றுகூடும்படி தகவல் தெரிவித்துள்ளனர்.
தேசியகொடியுடன் திரண்டனர்
அதன்பேரில் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கையில் தேசியக்கொடியை ஏந்தியபடி வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர்.
தகவலறிந்த வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முன் அனுமதியின்றி ஒன்று கூடவோ, ஊர்வலமோ செல்ல கூடாது. அதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். உங்களின் கோரிக்கைகளை கலெக்டரிடம் மனுவாக கொடுங்கள் என்று போலீசார் கூறினர்.
தர்ணாவில் ஈடுபட்ட இளைஞர்கள்
இதையடுத்து இளைஞர்கள் அங்கிருந்து ஆட்டோ, பஸ், இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் முன்பு குவிந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள அணுகுசாலையில் அமர்ந்து அக்னிபாதை திட்டத்தை அமல்படுத்த கூடாது, பழையபடி ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு செய்ய வேண்டும், கடந்த 2019-ம் ஆண்டு உடற்தகுதி தேர்வில் தேர்வான இளைஞர்களுக்கு உடனடியாக தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். 5 பேர் மட்டும் உங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் அளித்து விட்டு கலைந்து செல்லும்படியும், தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டால் அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களில் 5 பேர் கலெக்டர் அலுவலகம் சென்று கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவனிடம் (பொது) மனு அளித்தனர். அதைத்தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.